ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்துள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு நேற்று பிற்பகல் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில், இந்த அரசியல் சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்துள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கான அதிகாரம், ஒழுக்காற்று சபைக்கு வழங்குவதற்கு அரசியல் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆசன அமைப்பாளர் பதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட மட்டத்தில் பெண் அமைப்பாளர்களை நியமிக்கவும் மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளது