குற்றச்செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குற்றச்செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து கூரிய வாள் மூன்று கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதனையடுத்து 40 வயதான சந்தேக நபரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான 17 வயது இளைஞன் ஒருவர் கூரிய கத்தியால் விசேட அதிரடிப்படையினர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது காயத்திற்கு உள்ளான விசேட அதிர அதிரடிப்படை வீரர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் பாடசாலை செல்லும் மாணவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.