கண்டி – புஸ்ஸல்லா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில், கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புத்தாண்டுக் காலப்பகுதியில் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு பயணித்த சுற்றுலாப் பயணிகள், மீண்டும் நுவரெலியாவிலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே இந்த கோர விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த நபர்கள் பயணித்த வேன், கம்பளை – புஸல்லாவ பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு பள்ளத்தில் விழுந்ததில், 2 வயதுடைய குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த ஐவர் உடனடியாக அயலவர்களால் மீட்கப்பட்டு, வகுஹப்பிட்டிய மற்றும் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவரும் நேற்று இரவு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், சம்பவத்தில் படுகாயமடைந்த ஏனைய நால்வரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்து நேர்ந்தபோது குறித்த வேனில் 10 பேரளவில் பயணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், நேற்று காலை 7 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நேற்று முன்தினம் பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லான மேலும் தெரிவித்துள்ளார்.