பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவினரால் நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு – 15 ஐ சேர்ந்த 19 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் அதுருகிரிய, மாலபே ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அதுருகிரிய, கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 46 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் பொல்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கம்பஹா, இராகமை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கணேமுல்ல, இராகமை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 423 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.