”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம்.
ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது.
மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை.
மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.