முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது” குறித்த மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.