மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசியல் கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். எமது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இதற்கான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர்.
கட்சியில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு நாம் எதிர்ப்ப்பார்த்துள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் பலர் விமர்சித்துவருகின்றனர். அது மிகவும் தவறான கருத்தாகும்.
எமது கட்சி வீழ்ச்சியடையவில்லை. எதிர்வரும் மே தின பேரணியில் நாம் அதனை நிரூபிப்போம். மே தின கூட்டத்தினை தொடர்ந்து அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் கிராமமட்டத்தில் இருந்து எமது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.