மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் அதனை தாம் வரவேற்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ரணில், சந்திரிக்கா, சஜித், மஹிந்த, கோட்டாபய மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒன்றாக இணைந்து எங்களுக்கு எதிராக போட்டியிடுவார்களாக இருந்தால் அப்போதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி.
எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதனை நாம் விருப்பத்துடன் வரவேற்போம்.
கடந்த 1947 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்த அனைவருமே இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தனர். எனவே இவர்கள் ஒன்றாக இணைந்து எம்மை எதிர்க்கும் போது அதனை மக்களுக்கு இலகுவாக அடையாளம் காட்டமுடியும்.
நாட்டில் தீய விளைவுகளை ஏற்படுத்தியவர்கள் இவர்களே. நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் இவர்களே நாட்டை கொள்ளைடித்தவர்களும் இவர்களே.எமது பக்கம் இருப்பவர்கள், நாட்டை வளச்சி பாதையில் இட்டுச் செல்ல எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.
புதிய வேலைத்திட்டங்களுடன், புதிய அரசியல் தலைவருடன் மக்களின் திசைக் காட்டியாக எம்முடன் பலர் இருக்கிறார்கள்.
இன்னும் இரு நாட்களில் குறித்த இரு குழுக்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியவரும் என நினைக்கின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தற்போது சந்திரிகாவின் காலடியில் வைத்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவில் அநேகமான அமைச்சர்கள் தற்போது ரணிலுடன் இருப்பதாக கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்திக்கும் தற்போது வலைவீசப்பட்டுள்ளது” இவ்வாறு நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.