வெயாங்கொட பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகை அரிசி கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், கைப்பற்றப்பட்டுள்ள அரிசி தொயையை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
வெயாங்கொட பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மாதிரிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக உணவுத்திட்டத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கு விநியோகிக்கப்படவிருந்த அரிசி கையிருப்பே இவ்வாறு நுகர்வுக்கு பொருத்தமற்றது என அரச இரசாயன பகுப்பாய்வாளர்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் போஷாக்கு குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்து 134 அரச பாடசாலைகள் இந்த திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 1.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.