ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் நீடிப்பாராயின் இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
காலியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்
இது குறித்து வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளதாவது ” நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கியமானவையே. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்திலேயே பலமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதனாலேயே ஒன்றிணைந்து செயற்படமுன்வருமாறு ஜனாதிபதி வலியுறுத்திவருகின்றார்.
வீழ்ச்சியடைந்த நாட்டை, பதவியேற்ற சிறு காலத்துக்குள்ளேயே இயல்பு நிலைக்கு கொண்டுவந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவரைப் பொறுத்தவரை வெளிவிவகார ஆலோசகர்கள் மற்றும் நிதியமைச்சுக்கான ஆலோசகர்கள் தேவையில்லை.
பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகளுக்கும் ஆலோசகர்கள் தேவையில்லை. ஏனெனில் இவை அனைத்தையும் தனியொரு நபராக செய்யக்கூடியவர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க.
இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைகள் மற்றும் போராட்டங்களின் போது பல அரசியல் தலைவர்களும் சில அமைப்புக்களின் தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன சரத்பொன்சேகா போன்றவர்கள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர். விஜேகுமாரதுங்க, வேலுப்பிள்னை பிரபாகரன் போன்றவர்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான சம்பவங்களினால் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் விரிசல் ஏற்பட்டது. இந்த நாட்டில் பல காட்டிக்கொடுப்பு சம்பவங்களும் இடம்பெற்றன. இவை அனைத்தும் தவிர்க்கப்பட்டு அனைவரும் ஒன்றிணையும் பட்சத்திலேயே வளமான ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும்” இவ்வாறு வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.