ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவர் வருகை தந்த விசேட விமானத்திலேயே நாடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை நாட்டிற்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி, உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதனிடையே, இலங்கை மற்றும் ஈரான் இடையில் 5 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
இதன்போது, இலங்கை தேசிய நூலகம், ஈரான் தேசிய நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் ஆகியவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் ஈரானின் கலாசார இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சுக்கு இடையே திரைப்படத் துறையின் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ஊடகம் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கான ஒப்பந்தங்களும் இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகள் இணைந்து கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தினர்.
இலங்கை மற்றும் ஈரான் இடையிலான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார தொடர்புகளை விரிவுபடுத்துவதில் எந்தவித வரம்புகளும் கட்டுப்பாடுகளும் இல்லையென ஈரான் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.