இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகததால், திருகோணமலையில் அவரது சரியான முகவரிக்கு மீண்டும் அழைப்பு கட்டளை அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்போது முதலாம் மற்றும் மூன்றாம் எதிராளிகள் தரப்பு சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம் கோரினார்.
இதனையடுத்து எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி ஜீன் 20ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றதை தொடர்ந்து வழக்கு எதிர்வரும் மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.