கொஹுவல பகுதியில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரை மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை, களுபோவில வீதியில் வசித்து வந்த 64 வயதுடைய சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சட்டத்தரணி, குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், அவரது சகோதரர் கனடாவில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இறுதியாக தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கனடாவைச் சேர்ந்த சகோதரரின் நண்பரான மிரிஹானவில் வசிக்கும் ஒருவர் நேற்றைய தினம் கொஹுவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, கொஹுவல பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் வீட்டின் கதவு பகுதியளவில் திறந்திருந்ததாகவும் வீட்டினுள் காணப்பட்ட பொருட்கள் காணாமல் போயிருந்த நிலையில் வீட்டின் அறையொன்றில் இருந்து சட்டத்தரணியின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பதில் நீதவான் ரத்ன கமகே, முதற்கட்ட நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை களுபோவில போதனா வைத்தியசாலையில் வைத்து சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்