“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப்பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, தொழிலாளர் சமுதாயம் உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்
தி.மு.க. தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம். தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
அத்துடன் 1969-இல் முதல்அமைச்சராக பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த தி.மு.க. அரசு தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது.
மேலும் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது தி.மு.க.ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.