தான் எந்தவொரு அரசியல்கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சமீபத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது கர்தினால் மல்கம் ரஞ்சித் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என தெரிவிக்கும் வகையில் செயற்படுகின்றார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் அல்லது பொதுமக்களின் ஆதரவை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் தான் கருத்துத் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித் அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளை கண்டித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் இவ்வாறான அறிக்கைகள் மக்களை தவறாக வழிநடத்தலாம் என தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான ஆதாரமற்ற அறிக்கைகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் பாதுகாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை விமர்சிக்ககூடாது என தெரிவித்துள்ள மெல்கம் ரஞ்சித் சில தனிநபர்களின் அறிக்கைகளால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.