இஸ்ரேலில், அல்ஜசீராவின் ஊடக பணிகளுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கத்தார் நாட்டு செய்தி நிறுவனமான அல்ஜசீராவின், ஊடக செயற்பாடுகளை, இஸ்ரேலில் முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தின் படி அல்ஜசீராவின் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்புகள் வெளியான சில மணிநேரங்களில் ஜெரூசலேத்தின் அம்பாசடர் ஹோட்டலிலுள்ள அல்ஜசீரா அலுவலகத்திற்கு சென்ற இஸ்ரேலிய பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், ஒளிபரப்பு உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து, அந்நாட்டின் செய்தி விவகாரங்கள் துறை அமைச்சர் ஷ்லோமோ கார்ஹி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
”இஸ்ரேல் அரசுக்கு எதிராகத் தூண்டும் பதிவுகளைப் பரப்பும் எவரும் இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பு செய்ய முடியாது” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டால், அமைச்சரவை மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை தடை செய்ய அதிகாரமளிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.