திருகோணமலை மாவட்ட பொது வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று திருகோணமலைக்கு விஐயம் செய்துள்ளார்
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையினை பொறுத்தவரையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது, குறிப்பாக வைத்தித நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் தொடர்பாகவும் பாரிய பற்றாக்குறைகள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்
வைத்தியர்களது தங்குமிட வசதிகள் பாரிய பற்றாக்குறையுடன் காணப்படுகிறது, இதன் காரணமாக இங்கு பணியாற்றும் வைத்தியர்கள் கூட பாரிய சிக்கல்களுக்கு மத்தியில் கடமை புரிந்து வருவதை அவதானிக்க முடிகிறது
மேலும் அவசர சிகிச்சைப்பிரிவு இன்னும் அபிவிருத்தி அடையாமலும், இருதய சத்திரசிகிச்சைப்பிரிவானது இன்னமும் அமைக்கப்படாமலும் காணப்படுவதால் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளர்கள் பரவலாக வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் பரிசோதனைகளுக்குத் தேவையான இயந்திரக் கட்டமைப்புகளும் போதியதாக இல்லை என்பதனையும் தாம் அடையாளங்கண்டு கொண்டதுடன் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது இது தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டங்களது கவனத்திற்கு கொண்டுவருவதற்கான முன்னேற்பாடுகளை தாம் செய்யவிருப்பதாக இதன்போது அவர் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.