முன்னறிவித்தல் விடுக்கப்படாமல் மின்சாரத்தை துண்டிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
முன்னறிவிப்பின்றி வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றமை தொடர்பாக இன்று நாடாளுமன்றில் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
“மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் அவப்பெயர் ஏற்படுவது மின்சாரசபைக்கே ஆகும்.
மின்சாரத்தைத் துண்டிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோரே அறிவுறுத்தல் விடுப்பதாக மக்கள் எண்ணுகின்றனர்.
இது தவறான கருத்தாகும் மின்சார துண்டிப்பு தொடர்பான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னரே மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
இது தற்காலிகமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. அதன்பின்னர் நிலுவைக்கட்டணம் மற்றும் மீள் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்திய பின்னர் பாவனையாளர்களுக்கு மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்படுகின்றது.
மின்சார துண்டிப்பு விடயத்தில் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
சிவப்பு அறிவித்தல் விடுக்கப்படாமல் மி;ன்சாரத்தை துண்டிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் பின்னர் அதனை மீள் இணைப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.