பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் ரியோ கிராண்டோ டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் உருகுவே மற்றும் அர்ஜென்டினாவின் எல்லையில் உள்ள மாகாணத்தில், பதிவான மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 132 பேர் மாயமாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 361 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.