தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் எதிர்ப்பவர்கள் மத்தியிலும் அந்த விடயம் தொடர்பாக பொருத்தமான விளக்கங்கள் உண்டா? அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள், யுடியூப் காணொளிகளில் வெளிவரும் தகவல்கள், சில அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் அறிக்கைகள், நேர்காணல்கள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது அப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது.
இந்த விடயம் குழப்பமாகவும் சிக்கலாகவும் மாறக் காரணம் அதைக் கிட்டத்தட்ட நான்கு தரப்புகள் முன்னெடுத்தமைதான்.
முதலாவதாக, அந்த விடயத்தைக் குறித்து இந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி முதலில் பேசியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இரண்டாவதாக,அந்த விடையத்தில் கருத்துருவாக்கத்தை செய்யும் நோக்கத்தோடு நான்கு கருத்தரங்குகளை நடத்தியது “மக்கள் மனு ” என்ற பெயர் கொண்ட ஒரு சிவில் அமைப்பு.
மூன்றாவதாக, அந்த விடயத்தைக் குறித்து சில கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடாத்தியது. புலம் பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர் ஒருவர்.
நான்காவதாக, அந்த விடயத்தைக் கையில் எடுத்தது சிவில் சமூகங்கள்.
ஒரே விடையத்தை நான்கு தரப்புக்கள் முன்னகர்த்தின. அதனால்தான் குழப்பம் ஏற்பட்டது. “மக்கள் மனு” என்றழைக்கப்படும் சிவில் சமூகம் இது தொடர்பாக முதலில் செயல்பூர்வ நடவடிக்கையில் இறங்கியது.ஏற்கனவே கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஒரு பொதுத்தமிழ் வேட்பாளரை நிறுத்த முயற்சித்த தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளரோடு மக்கள் மனுவின் முக்கியஸ்தர் ஒருவர் பல மாதங்களுக்கு முன்னரே உரையாடினார்.இந்த விடயத்தில் இந்த முறையும் குறிப்பிட்ட சுயாதீனக் குழு செயல்படுமா என்பதை அறிய விரும்பினார். தமிழ் மக்கள் பேரவை அரங்கில் இல்லாத ஒரு வெற்றிடத்தில், அந்த விடயத்தை கையில் எடுப்பதற்கு பலமான மக்கள் கட்டமைப்புகள் அப்பொழுது இருக்கவில்லை.
இப்படிப்பட்டதோர் பின்னணியில், மக்கள் மனு என்ற சிவில் அமைப்பு மூன்று கருத்தரங்குகளை தமிழர் தாயகப் பகுதியில் ஒழுங்குபடுத்தியது.முடிவாக யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தினர் விடுதியில் தமிழ் அரசியல் சமூகத்தோடு ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியது.இச்சந்திப்பு கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது.
இச்சிவில் சமூகத்தின் நடவடிக்கைகளுக்கு -குறிப்பாக கருத்துருவாக்க நடவடிக்கைகளுக்கு-சமாந்தரமாக சில அரசியல் செயல்பாட்டாளர்களும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் ஒரு பலமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காகத் தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
இம்முயற்சிகளின் விளைவாக கடந்த மே மாதம் 30 ஆம் தேதி வவுனியாவில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.அச்சந்திப்பில் மதப் பெரியார்களும் சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் ஊடகச் செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றினார்கள்.முடிவில் வவுனியாத் தீர்மானம் என்று அழைக்கப்படும்,கோட்பாட்டு ரீதியாக மிகவும் ஆழமான,கூர்மையான சுருக்கமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவில் சமூகங்களின் சந்திப்பில் மக்கள் மனு அமைப்பும் பங்கு பற்றியது. அந்த தீர்மானத்தில் அந்த அமைப்பும் கையெழுத்திட்டது.அதேசமயம் அந்த அமைப்பினால் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அரசியல்வாதிகளுடன் சந்திப்பை பற்றி மக்கள் மனுவின் பிரதிநிதிகள் மேற்படி சிவில் சமூக ஒருங்கிணைப்பாளர்களுக்குத் தெரிவித்திருந்தார்கள்.நாலாம் திகதி கூட்டத்திற்கு ஏனைய சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒரு பகுதியினருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டது.
வலம்புரிச் சந்திப்பில் சிவில் சமூகங்களின் வவுனியா தீர்மானம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அங்கு வந்திருந்த அரசியல் சமூகத்தினர் கொள்கை அளவில் பெருமளவுக்கு இணக்கம் தெரிவித்தார்கள்.தமிழரசுக் கட்சி இரண்டு கிழமைகள் அவகாசம் கேட்டது. அங்கு வந்திருந்த தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் கொள்கையளவில் ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் காணப்பட்டார்கள்.எனினும் கட்சி எடுக்கப்போகும் முடிவுக்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதையும் வலியுறுத்தினார்கள்.வலம்புரிச் சந்திப்புடன் மக்கள் மனு அமைப்பின் பிரதிநிதி ஒருவர் அதன் கருத்துருவாக்கப் பணிகள் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார்.
இதுதான் நாலாம் திகதி,வலம்புரி விருந்தினர் விடுதியில் நடந்தது. மேற்படி சந்திப்பின் முடிவில் அது தொடர்பாக ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டு ஓர் ஊடக சந்திப்பும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்திருந்தால்,அதைப்பற்றிய விளக்கம் தெளிவாகக் கிடைத்திருக்கும்.அப்படித்தான் வவுனியாத் தீர்மானத்தைக் குறித்தும் ஊடகச் சந்திப்பை ஒழுங்குபடுத்தி தீர்மானத்தை அதில் வைத்து வெளியிட்டு இருந்திருந்தால் அங்கேயும் குழப்பங்களுக்கு இடமிருந்து இருக்காது என்று ஒரு கருத்து உண்டு.
இந்த விடயத்தில் சிவில் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் அவசரப்பட்டு ஊடகச் சந்திப்புகளை நடத்துவதற்கோ ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கோ தயாராக இருக்கவில்லை என்ற ஒரே காரணத்தினால் அவர்கள் வவுனியாத் தீர்மானத்தை மென் பிரதியாக ஊடகங்களுக்கு கொடுத்தார்கள். வலம்புரிச் சந்திப்பைக் குறித்து உத்தியோபூர்வமாக சிவில் சமூகங்கள் எதையும் தெரிவித்திருக்கவில்லை.அரசியல் தலைவர்கள் அவரவர் நோக்கு நிலையில் இருந்து ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
அடுத்த கட்டமாக வவுனியாத் தீர்மானத்தின் பிரகாரம் தீர்மானத்தில் கையெழுத்திட்ட அமைப்புகளும் நபர்களும் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான சந்திப்புகளை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள்.இந்த விடயம் தொடர்பாக சிவில் சமூகங்களின் கூட்டிணிவு உத்தியோகபூர்வமாக ஊடகச் சந்திப்பு எதையும் நடத்தியிருக்கவில்லை. அவ்வாறு நடத்தாமல் விட்டது உத்திபூர்வமாகத தவறாக இருக்கலாம். தவறான செய்திகள் பரவுவதற்கும் பிழையான ஊகங்கள் பரவுவதற்கும் அது காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு நிர்ணயகரமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது எல்லாவற்றையுமே உடனுக்குடன் சுடச்சுட செய்தியாகக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ?
ஊடகங்களில் பரபரப்புக்காக செய்திகளைப் பிரசுரிப்பது வேறு. தேசத்தைக் கட்டி எழுப்புவதற்காக செய்திகளைப் பிரசுரிப்பது வேறு. அதிலும் குறிப்பாக தேசத்தைச் சிதைப்பதற்காக செய்திகளைப் பிரசுரிப்பது வேறு.
வலம்புரிச் சந்திப்பின் பின் வெளிவரும் ஒரு தொகுதி செய்திகளும் கட்டுரைகளும் காணொளிகளும் தேசத்தைச் சிதைக்கும் நோக்கிலானவை. அவை அரசியல் சமூகத்தை விமர்சிப்பது போலவே சிவில் சமூகங்களையும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டன.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் அரசியல் சமூகத்தில் காணப்படும் பிரமுகர்கள் மீது சகல விதமான அவதூறுகளும் அள்ளி வீசப்பட்டிருக்கின்றன. சூழ்ச்சிக் கோட்பாடுகள் புனையப்பட்டிருக்கின்றன. இப்பொழுது சிவில் சமூகங்களின் மீதும் அப்படிப்பட்ட தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன. சந்திப்புகளின் பின்னணியில் வேறு நாடுகள் அல்லது தூதரகங்கள் இருப்பதாக சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன.சந்திப்புகளுக்கான நிதி எங்கிருந்து கிடைத்தது என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.சந்திப்பை ஒழுங்குபடுத்திய செயற்பாட்டாளர்களை விமர்சித்தும் கீழ்மைப்படுத்தியும் கட்டுரைகளும் செய்திகளும் காணொளிகளும் வெளிவருகின்றன.
இவற்றைச் செய்யும் ஒரு தொகுதியினர் தமிழ்த் தேசிய முகமூடியை அணிந்திருக்கிறார்கள்.தமிழ் மக்களின் தேசத் திரட்சியை சிதைக்கும் உள்நோக்கமுடைய ஊடகவியலாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் கட்சிக்காரர்களும் திட்டமிட்டு செய்திகளையும் கட்டுரைகளையும், பிரசுரித்து வருகிறார்கள்.
சிவில் சமூகங்களையும் அரசியல்வாதிகளைப் போன்று விமர்சிக்கும் ஒரு போக்கு எனப்படுவது இதற்கு முன்னரும் காணப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்பிய பின்னரும் இப்படி ஒரு தோற்றப்பாடு எழுந்தது. அம்முயற்சியில் கட்சிகளை ஒருங்கிணைத்த சிவில் சமூகத்தவர்கள் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டார்கள்.அம்முயற்சியை ஒருங்கிணைத்து கிளிநொச்சி அன்னை தெரேசா மண்டபத்தில் நடந்த மூன்றாவது கூட்டத்தில், ஒரு கூட்டுக் கடிதத்திற்கான இறுதி வடிவத்தைத் தயாரித்து,அனைத்துக் கட்சிகளையும் அதில் ஒற்றுமைப்பட வைத்த சிவில் சமூகத்தவர்கள் ஊடகங்கள் முன் தோன்ற விரும்பவில்லை.ஆனால் கட்சிகள் தங்களுக்கு இடையே பிடுங்குபடத் தொடங்கியதால்,சிவில் சமூகங்களையும் விமர்சிக்கத் தொடங்கியதால் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஓர் ஊடக நிகழ்ச்சியில் தோன்றி தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது.
அப்பொழுது விமர்சனங்களை அதிகமாக வைத்தது கட்சிகள்.இப்பொழுது அவ்வாறு விமர்சனங்களை வைப்பது சில ஊடகங்கள்,சில அரசியல் செயற்பாட்டாளர்கள்.தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை கீழ்த்தரமாக விமர்சிப்பதன்மூலம் அவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள்? தமிழ் மக்களைச் சிதறடித்துப் பருந்துகளிடம் கொடுக்கப் போகிறார்களா?
வவுனியாச் சந்திப்பில் திருமலை மறை மாவட்ட ஆயர் பங்குபற்றினார்.தென் கைலை ஆதீனத்தின் குருமுதல்வர் பங்கு பற்றினார்.நல்லூர் சிவகுரு ஆதினத்தின் குருமுதல்வர் பங்குபற்றினார்.இவர்களோடு வெளிநாட்டுத தூதரகங்கள் மத்தியில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் லொபி செய்து வரும் சிவில் சமூகங்கள் பங்குபற்றின.வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாகப் போராடும் அமைப்புக்கள்.பாதிக்கப்படட மக்கள் மத்தியில் செயற்படும் அமைப்புக்கள் போன்றன பங்குபற்றின.தமிழில் தொடர்ச்சியாக அரசியல் கட்டுரைகளை எழுதுபவர்கள் பங்குபற்றினார்கள். இவர்கள் எல்லாரையும் யாரோ காசு கொடுத்து இயக்குகிறார்கள் என்று கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதும் நபர்கள், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தேசிய இருப்பைச் சிதைக்கப் போகிறார்களா?