ஈரானுடனான சபஹர் துறைமுக ஒப்பந்தத்துக்கு, அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிலுள்ள சபஹர் துறைமுகத்தை, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வரும் இந்தியா, தற்போது தொடர்ந்து 10 ஆண்டுகள் நிர்வகிக்க ஈரானுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் முன்னிலையில், இந்தியா-ஈரான் இடையேன இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்கு, பொருட்களை அனுப்புவதற்கு, சபஹர் துறைமுகத்தை பயன்படுத்துவதால் போக்குவரத்து செலவும் கணிசமாக குறைகிறது.
ஆகவே, மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்த துறைமுக ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுடனான எந்தவொரு வணிக ஒப்பந்தமாக இருந்தாலும், பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான ‘சாத்தியமான ஆபத்து’ இருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் (Vedant Patel) தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க தடைகள் நடைமுறையில் உள்ள நிலையில், சபஹர் துறைமுக ஒப்பந்தம் மற்றும் ஈரானுடனான இருதரப்பு உறவுகள் விடயத்தில், இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கைகளை தெரிவிக்கும்படி கேட்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.