நாடு தொடர்பாக சிந்தித்துச் செயற்படும் ஜனாதிபதி ஒருவரே தெரிவு செய்யப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவர் நிமல்சிறிபால டீ சில்வா தரப்பினர் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கிடையில் இன்று முற்பகல் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினரகளை ஒன்றிணைத்து நாம் கூட்டணி அமைக்க நாம் ஏற்கனவே தீர்மானித்திருந்தோம்.
அதன்முதற்கட்டமாகவே இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது. புதிய கூட்டணி தொடர்பாக எதிர்காலத்தில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
நாட்டை நெருக்கடி நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நாடு தொடர்பாக சிந்திக்க வேண்டிய தருணம். நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவது யாராக இருந்தாலும் புதிய கூட்டணியாக நாம் ஆதரவு வழங்குவோம்.
இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
எனவே நாடு தொடர்பாக சிந்தித்து செயற்படும் ஜனாதிபதி ஒருவரே தெரிவு செய்யப்படுவார்” என துமிந்த திசாநாயக்க் மேலும் தெரிவித்தார்.