நாட்டின் பல பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களை அண்மித்து ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் நாட்களிலும் அதிக மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்தோடு, வடமேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலையால் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி கேகாலை, களுத்துறை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை முதல் பலத்த மழை பெய்துவருதுடன், கண்டி உள்ளிட்ட பல பகுதிகள் சிறிய வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.