பிரான்சின் புதிய சட்டத்தால் நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று கூறி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கலவரவத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்சில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தால் நியூ கலிடோனியாவில் 10 ஆண்டுகளாக வசிக்கும் பிரெஞ்சு குடியிருப்பாளர்களை மாகாணத் தேர்தலில் வாக்களிக்க அனுமதி கிடைத்துள்ளது.
எனினும் இந்த புதிய சட்டம் உள்ளூர் கனாக் வாக்குகளை நீர்த்துப்போகச் செய்வதுடன், கனக் மக்கள் ஒதுக்கப்படுவார்கள் என்பதால் நியூ கலிடோனியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
அதன்படி, கனக் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளதுடன், பிரெஞ்சு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டதால், பல நகரங்கள் போர்க்களமாக மாறியுள்ளன.
இந்த நிலையில் இந்த கலவரத்தில் கனக் பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
இந்த அவசரநிலை எதிர்வரும் 12 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வன்முறை மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்க, Tik tok செயலியை அதிகாரிகள் தடை செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.