பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 50,000க்கும் மேற்பட்ட இளங்கலை மாணவர்கள் திட்டமிட்ட நேரத்தில் பட்டப்படிப்பை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
மேலும் வேலைநிறுத்தம் காரணமாக பட்டதாரி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விவரங்கள் அடங்கிய பல்கலைக்கழக சேர்க்கை கையேடு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான யோசனைகளை கல்வி அமைச்சர் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும், கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என பல்கலைக்கழக ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.
இன்னிலையில் 16வது நாளாக இன்றும் போராட்டம் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.