நாட்டில் இணையம் ஊடாக சிறார்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 300 வீதத்தால்அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்கள் தொடர்பான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், இணையத்தில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக 55 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்துவது மற்றும் அழுத்தம் கொடுத்தல் தொடர்பாக 2023 ஆம் ஆண்டில் 150 முறைப்பாடுகளும், இந்த வருடம் ஏப்ரல் 31 ஆம் திகதி வரை 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் துஷ்பிரயோகத்திற்காக சிறார்களை இணையத்தளங்களில் கோருவது 300 வீதம் அதிகரித்துள்ளது என அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்கள் தொடர்பான தேசிய மையம் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் வயது குறைந்த சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட சில குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சென்ற பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குறித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும், எத்தனை சிறார்களின் புகைப்படங்கள் ஆபாசமான புகைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்பது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.