இறுதிகட்ட யுத்ததில் உயிர்நீத்த உறவுகளை நினைவுக்கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நாளைய தினம் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய தினமும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழக்கும் நிகழ்வு, வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுகளைத் தாங்கிய, ஊர்தியானது, நேற்று வவுனியாவை சென்றடைந்திருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகிய முள்ளியவாய்கால் பேரவலத்தின் சாட்சியங்களை தாங்கிய இந்த ஊர்தியானது, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணித்து நாளைய தினம் முள்ளிவாய்கால் நினைவு திடலை சென்றடையவுள்ளது.
இந்தநிலையில் வவுனியாவிற்கு வருகை தந்த ஊர்த்திக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தீபம் ஏற்றியும் மலர் தூவியும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதன்போது, பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பொங்கு தமிழ் நினைவு தூபி, பண்டாரவன்னியன் சதுக்கம், பசார் வீதி, குருமன்காடு, தாண்டிக்குளம், தரணிக்குளம், ஈச்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் குறித்த ஊர்தி சென்ற நிலையில் அங்கு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழின படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும் என்றும் தேசம் – சுயநிர்ணம்- இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும் என்னும் வாசங்களை தாங்கியவாறும், போரின் வடுக்களை சுமந்த படங்களை ஏந்தியும் குறித்த ஊர்தி தொடர்ச்சியாக பயணித்து வருகிறது.