கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய, ரதுபஸ்வல பிரதேச மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் இராணுவ மேஜர் உட்பட நான்கு சந்தேக நபர்களை விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய, ரதுபஸ்வல பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் காயமடைந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக சட்டமா அதிபரால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்று குறித்த நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட மாதம் முதலாம் திகதி இடம்பெற்றிருந்தது.
நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் நடவடிக்கையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறி அதனை எதிர்த்தே அப்பிரதேச மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ பிரிகேடியர் மற்றும் 3 இராணுவ சிப்பாய்கள் சந்தேக நபர்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.
கடந்த 4 ஆம் மாதம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தபோது, இன்றையதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
11 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத வன்முறைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணைகள் நீண்டகாலமாக இடம்பெற்றிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இந்த சம்பத்திற்கு முறையான தீர்வு வழங்கப்படவேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.
2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 06ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு சபையில் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க 2013 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேநேரம், இந்த சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காத நிலையில் இராணுவம் அழைக்கப்பட்டு பொதுமக்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது இராணுவம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்ற 90 துப்பாக்கிகள், அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை தமது பணிப்புரைக்கு அமையவே வெலிவேரிய கலகம் இடம்பெற்ற பகுதிக்கு இராணுவத்தினரை பாதுகாப்பு அமைச்சு அனுப்பி வைத்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.