இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மன்னாரில் இன்றைய தினம் சனிக்கிழமை(18) காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடரை அருட்தந்தை நவரட்னம் அடிகளார் ஏற்றி மாலை அணிவித்து நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலையொட்டி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.