நாட்டின் பல பகுதகிள் 150 மில்லி மீற்றலுக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீடித்த சீரற்ற காலநிலையால், புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 284 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், நாட்டில் சில நாட்களாக தொடரும் நிலவும் சீரற்ற கால நிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 432 குடும்பங்களைச் சேர்ந்த 946 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 ஆயிரத்து 618 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 464 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 2 குடும்பங்களைச் 5 பேரும் காலி மாவட்டத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 759 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 340 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 140 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, நாட்டின் பல பகுதகிள் கன மழைக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குமே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அடுத்த 24 மணித்தியாலங்களில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாளத்தில் நாட்டின் ஹொரண பகுதியில் 116 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி அத்தனுகலு ஓயா மற்றும் களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த நீர்நிலைகளை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுளளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்; தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கம்பஹா, கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மண் சரிவு எச்சரிக்கை இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணிவரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுனம் தெரிவித்துள்ளது.