நாடளாவிய ரீதியில் உறுமய உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
எனினும், காலாவதியான சில விதிகள் மற்றும் சட்ட கட்டுப்பாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் உறுமய வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் வகையில் தற்போது மாவட்ட மட்டத்தில் விசேட வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைவாக 20 இலட்சம் உரிமைப் பத்திரங்கள் வழங்கும் இலக்கை இந்த ஆண்டு முடிவடைவதற்குள் எட்ட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உறுமய காணி உறுதிப் பத்திர திட்டத்தின் கம்பஹா மாவட்டம் தொடர்பிலான பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உறுமய உறுதி உரிமைப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில் தற்போது பிரதேச செயலக மட்டத்தில் காணி உறுதி வழங்கல் தொடர்பான நடமாடும் சேவை நடைபெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உறுமய” உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.