நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேபோன்று, சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் குளியாபிட்டிய பிரதேசத்தில் 141 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, களனி, களு, நில்வலா மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகள் வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த நீர்நிலைகளை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, இன்று நண்பகல் 12 மணி வரை நாட்டின் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுளளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கம்பஹா, கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின் விநியோகம் தடைப்படும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும், மின்சாரம் தடைப்படும் பட்சத்தில், அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான தயார் நிலையில் உள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.