நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதால் மிக அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நாட்டில் நிலவம் சிரற்ற வானிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் கொழும்பு நகர எல்லையில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்தல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.