பொதுமக்கள் மத்தியில் நிதியியல் அறிவை மேம்படுத்தல் மற்றும் நிதியியல் செயற்பாடுகளில் அனைவரையும் உள்வாக்குதல் ஆகியவற்றின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் நிதியியல் அறிவு வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிடையே நிதியியல் அறிவை மேம்படுத்துவதையும், நிதியியல் செயற்பாடுகளில் அனைவரையும் உள்வாங்குவதையும் இலக்காகக்கொண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் அனுசரணையுடன் மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ள நிதியியல் அறிவு வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பவற்றை அடைந்துகொள்வதற்கு நிதியியல் அறிவு அவசியம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நிதியியல் செயற்பாடுகளில் நாட்டுமக்கள் அனைவரையும் உள்வாங்குவதை முன்னிறுத்தி மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வைப்பு மற்றும் முதலீடு உள்ளிட்ட நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், நிதிமோசடிகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் நிதியியல் அறிவு பெரிதும் உதவும் என்பதுடன், இது நிதியியல் முறைமை மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் மத்தியில் நிதியியல் அறிவை மேம்படுத்துவதன் ஊடாக வறுமை மட்டத்தைக் குறைப்பதற்கும், அதன்மூலம் சமூகப்பாதுகாப்பு உதவித்திட்டங்களுக்கான அரசாங்கத்தின் செலவினங்களை மட்டுப்படுத்துவதற்கும் முடியும் என ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.