எதிர்காலத்தில் மாணவர்களை நிபுணத்துவம் மிக்கவர்களாக மாற்றுவதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”சமூக வலுவூட்டலுக்காக கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். அதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், மதம், மொழி போன்ற பாடங்களில் சித்திபெறாமை, பரீட்சையில் சித்திபெறாததாகக் கருதக் கூடாது.
எனவே, க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பாடத்திட்டத்தில் திறன் விருத்தி மற்றும் தொழிற்கல்வி பாடத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்தத் தீர்மானத்தை அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க எதிர்காலத்தில் ஒரு முழுமையான நிபுணத்துவத்துவம் மிக்கவர்களை உருவாக்குவதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மேலும், சமூகத்தை வலுப்படுத்த நிலம் ஒரு முக்கிய காரணியாகும். எனவே, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற, ஆனால் இதுவரை பயிரிடப்படாத நிலத்தைப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் முழு நாட்டையும் வலுவூட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதற்காக, அரச மற்றும் தனியார் துறையினர் மட்டுமின்றி அனைத்து சுயதொழில் செய்பவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம்.
அதேபோல், ஒரு தொழில்முயற்சியாளர்களைக் கொண்ட நாட்டை உருவாக்க நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அதனுடன், அனைவரும் தொழில் கல்வியையும் பெற வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் முன்னேற்றுவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.