‘முதலமைச்சர் ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அவர், பிரதமர் மீது பழி சொல் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ எனவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஒடிசாவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மோடி “வீட்டு சாவி தொலைந்தால், ஜெகன்நாதரை வணங்கிவிட்டுத் தேடினால் அடுத்த சில மணிநேரத்தில் சாவி கிடைத்துவிடும். ஆனால், இங்கு ஜெகன்நாத் கோயிலின் கருவூலமான ரத்ன பண்டரின் சாவி காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டன.
அந்த சாவி தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டதால், அதுதொடர்பான விசாரணை அறிக்கை ஆறு வருடங்களாக வெளியிடப்படாமலிருக்கிறது” என்று கூறியிருந்தார்.
குறித்த கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து “வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முதலழமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துத் தெரிவித்த அண்ணாமலை” ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மீது அவர் பழி சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.