தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் முற்றுமுழுதாக சுயாதீனமானது எனவும் அதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சுயாதீனமான இயங்கக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய ஆதரவளிக்கும் நாடுகளுடன் இணைந்து இதனை செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
தென்கொரியாவில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் செயன்முறை, விசாரணை நடவடிக்கைகளின் தன்மை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் இந்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் லீ பீம் சியோக், பிரதிப் பணிப்பாளர் மூன் ஜோங்பில், உதவிப் பணிப்பாளர் லீகா யோன், இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி எம்.ஆர்.வை.கே. உடுவெல மற்றும் உதவிப் பணிப்பாளர் நாயகம் திருமதி டபிள்யு.எம்.டி.டீ.பண்டார ஆகியோரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.