நாடாளுமன்றத்தில் திடீரென சமர்ப்பிக்கப்பட்டுள்ள, பொருளாதார மாற்றச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மிகவும் கீழ்த்தரமான முறையில் செயற்படுகின்றது.
பொருளாதார முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு, பாரதூரமான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.
அந்த சட்டமூலத்தில் முதலீட்டுச் சபையை இல்லாதொழிப்பதற்கான சரத்து உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வர்த்தக சபையோ, தொழிலதிபர்கள் சங்கங்களோ, தனியார் துறையோ எவரிடமோ கோரிக்கை விடுக்கப்படவில்லை.
எனவே இவ்வாறான சட்டமூலத்தை கொண்டுவருவதற்கான விருப்பம் என்னவென்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இந்த சட்டமூலத்தை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம்.
குறித்த சட்டத்தால் பாதிக்கப்படும் அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராகச் செயற்படவுள்ளோம்.
தொழிற்சங்கங்களுடன் இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளோம்” என சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.