ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதால் அனைத்து மக்களும் தமது வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்த வேண்டுமென இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வரும் நிலையிலேயே பிரதமர் மோடி இவ்வாறு தனது எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது, “2024 நாடாளுமன்ற தேர்தலில் 6-வது கட்டமாக வாக்களிக்கும் அனைவரையும் அதிக அளவில் தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, மக்கள் தேர்தல் பணியில் ஈடுபடும்போதும், செயல்படும்போதும் ஜனநாயகம் செழிக்கிறது. குறிப்பாக பெண் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்குகின்றன.
இதேவேளை நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.