தேர்தலில் தோற்றுவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தலை 2 வருடங்களுக்கு பிற்போடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அரசாங்கம் தேர்தல் தோல்விக்கு அஞ்சியே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுசெயலாளர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்டவர்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தேர்தலுக்கு அஞ்சுபவர் அல்ல எனத் தெரிவித்தனர்.
அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து சுமார் 100 லட்சம் வாக்குகளை ரணில்விக்ரமசிங்க பெறுவார் எனவும் தெரிவித்தனர். ஆனால் தற்போது தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். தேர்தல் திகதி அறிவிப்பதற்கான குறுகிய காலஇடைவெளி உள்ள நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர்.
தேர்தலுக்கு அஞ்சியே தேர்தலை பிற்போட எண்ணுகின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி யின் தலைவர் சஜித் பிரேமதாசவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் மக்கள் வழங்குவார்கள் என்பதும் தெளிவாகின்றது. கபட சூழ்ச்சிகளின் ஊடாக தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கூறுகின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.