இந்தியாவில் தற்போது வீசும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திததி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருவதுடன், குறிப்பாக பீகார் மாநிலத்தில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று 50 பாகை செல்சியஸ் வெப்ப அலை வீசியதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்தோடு, பிகாரின் ஷோக்பூரா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வெப்ப அலையின் தாக்கத்தை தாங்க முடியாமல் மாணவ, மாணவியர் பலர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு உடனடியாக விடுமுறை வழங்குமாறு பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துமாறும் அவர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.