நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ள நிலையில், மீண்டும் பாரம்பரிய அரசியலில் ஈடுபடலாம் என எவரும் நினைக்க வேண்டாம் எனவும், முறையான திட்டத்தினூடாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விமர்சிக்காமல் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, விமர்சனம் இலகுவானது எனினும் தீர்வுகள் கடினமானவை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் எந்தவொரு அரசியல் கட்சியிடமும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திட்டம் இல்லையென தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறான திட்டம் இருந்தால் அதனை சமர்ப்பிக்குமாறும், இல்லை என்றால் நாட்டின் எதிர்காலத்திற்காக பொருளாதார மாற்ற சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறும் சகலரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.