கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால், 23 மாவட்டங்களில், 251 பிரதேசங்களிலுள்ள 23 ஆயிரத்து 723 குடும்பங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்,
“நிலவும் சீரற்ற காலநிலைக்காரணமாக மத்திய மாகாணம் சப்ரகமுவ மாகாணம், தெற்கு மாகாணங்களில் நிலைமை பாரதூரமானதாக காணப்பகின்றது.
ஏனைய மாவட்டங்களும் சிறிதளவில் பாதிகப்பட்டுள்ளது.
தொடர் மழையினால் தற்போது 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவருகின்றது. 5 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் அனர்த்தத்தினால்தான் உயிரிழந்துள்ளார்களாக என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று, நாடளாவிய ரீதியில் நிவாண உதவிகளை வழங்குவதற்கு 119 நிவாரண மத்திய நிலையங்கள் செயற்பட்டு வருகின்றது.
இந்த மத்திய நிலையங்களில் 2 ஆயிரத்து 313 க்கும் மேற்பட்ட குடுப்பங்களைச் சேர்ந்த, 23 ஆயிரத்து 706 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம அதிகாரிகள் உட்பட, சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோன்று, விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேநேரம் அவர்களின் சேவை தொடர்ந்து தேவைப்படுகின்றது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக கடற்படையினரும் விஷேட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், விமானப்படையினரும் தற்போது 3 ஹெலிகொப்டர்களை தயார் நிலையில் வைத்திக்கின்றனர்.
நாம் எமது முழு முயற்சியுடன், மக்களின் பாதுகாப்பு கருதி எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
அத்தோடு, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு நிதியை ஒதுக்குமாறு ஜனாதிபதியும் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மூன்று வேளையும் உணவு வழங்கவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகளிலுள்ள சில குடும்பங்கள், தங்களது மேல் மாடியில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கான உணவு வழங்கும் நடவடிக்கைகளை படகுகள் மூலம் நாம் முன்னெடுத்துள்ளோம்.”