இந்திய தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைநகர் டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்வடைந்துள்ளது.
50 டிகிரி செல்சியசிற்கும் கூடுதலாக வெப்பநிலை அங்கு உயர்ந்துள்ள சூழலில், வெப்ப அலையில் தாக்கத்தில் பல்வேறு நோய்களும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பத்தினால் யமுனை ஆற்றில் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளமையால், நீர் பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், நீரை வீணாக்கினால் அபராதம் விதிக்கப்படும் என டில்லி அரசாங்கம் அறிவித்தது.
வடக்கு மற்றும் தென்மேற்கு டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீர் லாரிகளில் கொண்டு சென்று நீர் வழங்கப்படுகிறது.
மேலும், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீருக்காக நீண்ட தூரம் செல்லும் அவல நிலமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு சில இடங்களில் தண்ணீர் கருமையாகவும், துர்நாற்றம் வீசும் வகையிலும் உள்ளமையால் குடிக்கவோ அல்லது சேமிக்கவோ, பிற தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் நாள் ஒன்றுக்கு 1,290 மில்லியன் கேலன்கள் தண்ணீர் தேவையாக உள்ளது.
ஆனால், 969 மில்லியன் கேலன்கள் அளவுக்கே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனால், 321 மில்லியன் கேலன்கள் குறைவான நீர் விநியோகம் நடைபெறுகிறது.
கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால், இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.