”கருத்துக் கணிப்புகளைத் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும்” என காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரான கலைஞர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த தினமான இன்று டெல்லியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பா.ஜ.கவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.
மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வென்றாலே போதும் என்ற நிலையில், பா.ஜ.க கூட்டணி 350 முதல் 380 தொகுதிகள் வரை வெல்லும் என்று சில கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.
பொறுத்திருந்து பாருங்கள். கருத்துக் கணிப்புகளை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும். நிச்சயம் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்” இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றே கூறப்பட்டிருந்தன. ஆனால் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.