சீரற்ற வானிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனால், இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாதுக்கை, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, மஹரகம, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, பொரலஸ்கமுவ, பெபிலியான, கலகெதர ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாதுகாப்பு படையினர் மற்றும் ஏனைய தரப்பினரின் உதவியுடன் உடைந்த பிரதான நீர் குழாயை மீளமைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேவையற்ற விதத்தில் நீரை சேமித்து வைக்க வேண்டாம் எனவும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.