இந்தியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்திய தேர்தல் முடிவுகள் குறித்தான கருத்து கணிப்புக்களின்படி, 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க பெற்ற ஆசனங்களை விட இம்முறை அதிக ஆசனங்களை பெறும் என எதிர்பாக்கப்படுகின்றது.
இந்திய மக்களை தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.
அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.
அதன்படி, 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மொத்தம் 64 கோடியே 20 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி, தெரிவுசெய்யப்பட்டால், அட்டல் பிஹாரி வாஜ்பாய்க்கு பின்னர் இந்தியாவின் மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி தனதாக்கிக்கொள்வார்.
இதனிடையே, 44 நாட்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்தியாவின் மக்களைவைத் தேர்தலில் சுமார் 1 பில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
அதன்படி, இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 64 கோடியே 20 இலட்சம் வாக்குகளுடன் உலக சாதனை பெற்றுள்ளதாக அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணியிடையே கடும் போட்டி நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தற்போது வரையான நிலவரப்படி, ஜனநாயக தேசிய கூட்டணி 295 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 228 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிலவரப்படி, தி.மு.க 38 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019 ஆண்டு பா.ஜ.க ஒரு தொகுதியை கூட பெற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், இம்முறை முன்னிலையில் இருப்பது விசேட அம்சமாகும்.