மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகரவினால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சாரசபை சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையை மறு சீரமைப்பது தொடர்பான சட்ட மூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் சட்ட மூலத்திற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த மனுக்கள் மீதாக விசாரணை இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் மாத்திரமே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குறித்த சரத்துக்கள் திருத்தப்பட்டால் சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன்; நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்த உயர்நீதிமன்றம் கூறிய திருத்தங்களை ஏற்றுக்கொள்வதான அமைச்சர் கஞ்சன விஜேயசேகர அறிவித்திருந்தார்.
அதற்கமைய திருத்தங்களுடன் மின்சார சபை சட்டமூலம் இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு, நடத்தப்பட்ட 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் மின்சாரசபை சட்ட மூலத்திற்கு ஆதவாக 103 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்த தொடர்ந்து இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் குறித்த சட்டமூலமானது திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.