முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் உறுதியளித்துள்ளார்.
முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 4 வயதுடைய சிறுமியொருவரை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையடுத்து, குறித்த 45 வயதுடைய நபர் ஒருவரும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கண்டனம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதிக்கப்பட்ட குழந்தையின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு அரச அதிகாரிகளிடமிருந்து விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான்கு வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளதுடன், நீதித்துறை செயல்முறையின் ஊடாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி ஆதரவை வழங்குவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதுபோன்ற துஷ்பிரயோகம் குழந்தைகளுக்கு நீடித்த பாதிப்பை எடுத்துக் காட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, இன்றைய சிறுவர்கள் இல்லாமல் நாளை இல்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர்களின் நலனுக்கே உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தனது எக்ஸ் தள பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.