பிரபஞ்சம் திட்டத்திற்காக யாழுக்கு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுழற்சி முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இன்று யாழ்.மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரபஞ்சம் திட்டத்திற்காக யாழுக்கு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, குறித்த இளைஞர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக அவ்விடத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது ”வட மாகாணத்தில் கிட்டத்தட்ட 4000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் எனவும் அவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் செய்வதற்கு சலுகை அடிப்படையிலான கடன் வசதியை செய்து தருமாறும் போராட்டக்காரர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை ”தான் அரசியல் ரீதியாக நலன்களை ஈட்டிக்கொள்ள இங்கு சமூகம் தரவில்லை என்றபடியால், இவர்களது பிரச்சினைகள் அனைத்தும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசின் பதில்களை பெற முயற்சிகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும், இந்நாட்டில் சுமார் 50,000 முதல் 60,000 பட்டதாரிகள் உள்ளனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இவர்களுக்காக மேற்கொள்ள முடியுமான தெளிவான மற்றும் முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கும் எந்தவித பாரபட்சமும் இன்றி கிராமத்துக்கும் நாட்டுக்கும் சேவையாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும், அவர்களின் திறமைக்கும் அவர்களின் அறிவுக்கும் உரிய இடம் வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
மற்றும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் போன்ற விடயங்களையும், மதம், இனம், சாதி என்ற பார்வையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, வங்குரோத்தான நாட்டை கட்டியெழுப்ப ஒரே தாயின் பிள்ளைகள் போல் கைகோர்க்குமாறும், இதற்கான தலைமைத்துவத்தை தாம் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.